பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் மோதல்: ஒருவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
- அமைந்தகரையில் நடந்த இன்னொரு மோதல் சம்பவத்திலும் கல்லூரி மாணவர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
- அமைந்தகரை போலீசார் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் நேற்று இரவு மாணவர்களுக்கு இடையே திடீரென மோதல் வெடித்தது. இதில் 2 பிரிவுகளாக மாணவர்கள் மோதிக் கொண்டனர்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களே இரண்டு தரப்பாக பிரிந்து மோதிக் கொண்டுள்ளனர்.
இதில் பீட்டர் என்ற மாணவருக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்து உள்ளது. இந்த சம்பவம் பற்றி இன்று காலையில்தான் போலீசார் கேள்விப்பட்டு உள்ளனர். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளும் விசாரணையில் இறங்கினர்.
போலீஸ் துணை கமிஷனர் கோபி இதுபற்றி உரிய விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து கீழ்ப்பாக்கம் போலீசார் கல்லூரி வளாகத்துக்குள் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவர் பீட்டர் எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரை கண்டுபிடித்து விசாரித்தால்தான் மோதலுக்கான காரணம் என்ன? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதே போன்று அமைந்தகரையில் நடந்த இன்னொரு மோதல் சம்பவத்திலும் கல்லூரி மாணவர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.
சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் துளசி நாதன் (21). இவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் கொண்ட கும்பல் துளசி நாதனை தாக்கி மண்டையை உடைத்து உள்ளது.
இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்தனர். கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்த பரத் என்ற பரத்ராஜ் (25) சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (21) ஆகியோர் புழல் சிறையிலும், 2 சிறுவர்கள் சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர்.