தமிழ்நாடு

சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 7 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்

Published On 2024-04-05 07:32 GMT   |   Update On 2024-04-05 07:32 GMT
  • அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
  • ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சென்னை:

பாராளுமன்ற தேர்தல் 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி 19-ந்தேதி பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது.

பொது மக்கள் அனைவரும் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் விடுமுறை விட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் சென்னையில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள், தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளன.

தேர்தல் நடைபெறும் நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனை தொடர்ந்து வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை என 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் அதனையொட்டிய புறநகர் பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அதனால் தேர்தலையொட்டி 17,18 ஆகிய தேதிகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து 7 ஆயிரம் சிறப்பு பஸ்களும் பிற நகரங்களில் இருந்து 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அரசு பஸ்களில் மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 728 இடங்கள் முன்பதிவு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. 18-ந் தேதி பயணம் செய்ய 13,800 பேரும், 17-ந்தேதி 3,075 பேரும், 16-ந்தேதி பயணத்திற்கு 633 பேரும் முன்பதிவு செய்துள்ளனர்.

ஓட்டுப்போட சொந்த ஊர் செல்லக் கூடியவர்கள் முன் கூட்டியே முன்பதிவு செய்து பயண திட்டத்தை வகுத்து கொள்ளுமாறு போக்குவரத்து கழகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடைசி நேரத்தில் கூட்டமாக வந்தால் பஸ் வசதி ஏற்பாடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது என்றும் அதனால் முன்பதிவு செய்து பயணத்தை தொடர்ந்தால் உதவியாக இருக்கும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோளாக வைக்கப்படுகிறது.

முன்பதிவு செய்யும் போது சிறப்பு பஸ்கள் திட்டமிட்டு இயக்குவதற்கு உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News