காங்கிரஸ் தலைவர் தேர்தல்- வாக்களிக்காத 38 நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்க முடிவு
- மொத்தம் உள்ள 711 பேரில் 62 பேர் வாக்களிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது.
- அகில இந்திய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் நிறைந்த பொறுப்பு வழங்கப்பட்டும் இத்தனை பேர் வாக்களிக்க வராதது கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சென்னை:
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 711 வாக்காளர்கள் உள்ளனர்.
அவர்கள் வாக்களிப்பதற்காக சத்தியமூர்த்தி பவனில் 4 வாக்குபதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. ஆர்வமுடன் பலர் வரிசையில் நின்று வாக்களித்து சென்றார்கள்.
மாலை 4 மணி வரை 649 பேர் வாக்களித்தனர். மொத்தம் உள்ள 711 பேரில் 62 பேர் வாக்களிக்கவில்லை என்பது அதிர்ச்சி அளித்தது.
அகில இந்திய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் நிறைந்த பொறுப்பு வழங்கப்பட்டும் இத்தனை பேர் வாக்களிக்க வராதது கட்சி மேலிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
தமிழ்நாட்டை சேர்ந்த சில நிர்வாகிகள் வெளிமாநிலங்களில் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். கேரள மாநில பொறுப்பாளராக இருக்கும் அகில இந்திய செயலாளர் முன்னாள் எம்.பி. விசுவநாதன் சென்னைக்கு வந்து வாக்களித்தார். ப.சிதம்பரம் டெல்லியில் வாக்களித்தார். தாம்பரம் சிவராமன் ஹசீனா சையத் ஆகியோர் ஆந்திராவில் வாக்களித்துள்ளார்கள்.
இதுதவிர ராகுல் நடைபயணத்தில் இருக்கும் சி.டி.மெய்யப்பன், ஜோதிமணி, காயத்ரி ராஜ் முரளி, டாக்டர் நிர்மல், வக்கீல் சுதா, ஜோதி மகேந்திரன் ஆகியோர் பெல்லாரியில் வாக்களிததுள்ளார்கள்.
இவர்களையும் சேர்த்தால் 38 பேர் வாக்களிக்கவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்க தமிழக காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.