அலைமோதும் மக்கள் கூட்டம்- சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க பயணிகள் வேண்டுகோள்
- தரமணி, பெருங்குடி, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
- ரெயில் சேவை மாற்றத்தையொட்டி மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன.
சென்னை:
சென்னை-எழும்பூர் கடற்கரை இடையே 4-வது ரெயில்பாதை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதன் காரணமாக கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே பறக்கும் ரெயில் சேவை நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை- வேளச்சேரி இடையே மட்டும் ரெயில் சேவை இயக்கப்படுகிறது. இதனால் விடுமுறை நாளான நேற்று கூட்டம் அலைமோதியது.
மெரினா கடற்கரைக்கு வந்தவர்கள் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் குவிந்தனர்.
பொதுவாக மக்கள் நடமாட்டம் இன்றி களை இழந்து காணப்படும் சிந்தாதிரிப்பேட்டை நிலையம் பரபரப்புடன் செயல்பட்டது. போதிய பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
இன்று திங்கட்கிழமை அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு செல்லக்கூடியவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என கூட்டம் களை கட்டியது. காலை 6 மணி முதல் படிப்படியாக அதிகரித்த கூட்டம் 9, 10 மணிக்கெல்லாம் ரெயில் நிலையம் நிரம்பி காணப்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய ரெயில்களிலும் அங்கிருந்து சிந்தாதிரிப்பேட்டை வரக்கூடிய ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. பயணிகள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர். பெண்கள், கூட்ட நெரிசலில் சிக்கி பயணித்தனர்.
தரமணி, பெருங்குடி, அடையாறு, மயிலாப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
ரெயில் சேவை மாற்றத்தையொட்டி மாநகர பஸ்களும் கூடுதலாக இயக்கப்பட்டன. பிராட்வேயில் இருந்து சித்தாதிரிப்பேட்டை வழியாக 2436 சேவைகளும், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கத்தில் இருந்து பிராட்வேக்கு 2436 சேவையும் வழக்கமாக இயக்கப்படுகின்றன. இதை விட கூடுதலாக 140 சேவைகள் இருபுறமும் நேற்று இயக்கப்பட்டன.
ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பஸ் வசதியும் போதுமானதாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். 30 நிமிடத்திற்கு ஒரு சேவை என்ற அளவில் பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயிலில் இருந்து இறங்கி வரும் 1000 பயணிகளுக்கு போதுமான அளவு பஸ் வசதி இல்லை.
ரெயில் சிந்தாதிரிப்பேட்டைக்கு வந்தவுடன் அதில் இருந்து இறங்கி வரும் பயணிகளுக்கு 3 பஸ்கள் தான் நிற்கின்றன. ஒரே நேரத்தில் ஆயிரம் பயணிகள் ரெயிலுக்கு காத்து நிற்கின்ற நிலையில் வேளச்சேரியில் இருந்து வரும் ரெயிலில் ஆயிரம் பயணிகள் வருவதால் 2-வது பிளாட்பாரத்தில் கடுமையான நெரிசல் காணப்படுகிறது.
மேலும் நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து பிளாட்பாரத்தில் பயணிகள் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.
சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் 8 பஸ்கள் பிரத்யேகமாக பயணிகளை அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும் அவை போதுமானதாக இல்லை.
காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க வேண்டும். அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு செல்ல கூடியவர்கள் அதிகளவில் பயணிப்பதால் பஸ்சுக்கு காத்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
எனவே மேலும் கூடுதலாக மாநகர பஸ்களை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.