தமிழ்நாடு

2 வந்தே பாரத் ரெயில் சேவையை சென்னையில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி: முதலமைச்சர் பங்கேற்கிறார்

Published On 2024-06-15 06:21 GMT   |   Update On 2024-06-15 06:21 GMT
  • சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுகிறது.
  • நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 2-வது சுரங்கம் அருகே 50மெகாவாட் மின் திறன் சூரிய மின்சக்தி மின் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது.

சென்னை:

இந்தியாவின் பிரதமராக தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்றுள்ள பிரதமர் மோடி முதல் 100 நாள் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த தொடங்கி உள்ளார்.

முதல் கட்டமாக இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு அவர் இன்று நாடு திரும்பி உள்ளார்.

அடுத்து அவர் பல்வேறு துறை செயலாளர்களுடன் ஆலோசனையை தொடங்கி இருக்கிறார். முதல் 100 நாளில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி ஆய்வு செய்து அவற்றுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வருகிற 18-ந்தேதி பிரதமர் மோடி வாரணாசி தொகுதிக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதைத் தொடர்ந்து வருகிற 20-ந்தேதி (வியாழக்கிழமை) அவர் தமிழகம் வர உள்ளார். சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அன்று காலை 10 மணிக்கு பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்ற உள்ளார்.

சென்னை விழாவில் 2 வந்தே பாரத் ரெயில்களின் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்க உள்ளார். சென்னை எழும்பூர்-நாகர்கோவில் இடையே ஒரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. அதுபோல மதுரையில் இருந்து பெங்களூருக்கு சென்னை வழியாக மற்றொரு வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது.

இந்த 2 ரெயில் சேவைகளையும் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அதே சமயத்தில் மதுரை ரெயில் நிலையத்திலும் வந்தே பாரத் ரெயிலுக்கான தொடக்க விழா நடைபெற உள்ளது.

நெல்லை மாவட்டம் மணியாச்சியில் இருந்து நாகர்கோவில் வரை 102 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்க 2015-ம் ஆண்டு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ.1,752 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வந்தன.

அதில் தற்போது ஆரல்வாய்மொழி-நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம்-நெல்லை இரட்டை வழி தடத்தையும், நாகர்கோவில்-கன்னியாகுமரி இடையிலான இரட்டை வழி தடத்தையும் பிரதமர் மோடி அன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் வந்தே பாரத் ரெயில் பெட்டிகளுக்கான பராமரிப்பு பணிமனை அமைக்கப்படுகிறது. இந்த பணிமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும் நெய்வேலியில் 3 திட்டங்களை அடிக்கல் நாட்டவும், தொடங்கி வைக்கவும் இருக்கிறார்.

நெய்வேலி 30-வது வட்டம் ஞாயிறுசந்தை அருகே 10 மெகாவாட் மின்திறன் கொண்ட சூரிய சக்தி மின் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

அதுபோல நெய்வேலி சுரங்கம் 1-ஏ அருகே நிலக்கரியை வெட்டி எடுப்பதற்கான மேல்மணல் நீக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. இந்த பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருக்கிறார்.

மேலும் நெய்வேலி அனல்மின் நிலையத்தின் 2-வது சுரங்கம் அருகே 50மெகாவாட் மின் திறன் சூரிய மின்சக்தி மின் திட்டம் அமைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்ட உள்ளார்.

விழாவில் பிரதமர் மோடியுடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை தென்னக ரெயில்வே அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்ற பிறகு மோடி முதல் முறையாக சென்னை வர இருப்பதால் அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News