தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு
- புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
- கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும்.
சென்னை:
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது உலக நாடுகளை அச்சமடைய செய்துள்ளது. 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து படிப்படியாக விடுபட்டு வரும் நிலையில் தற்போது புதிய வகை கொரோனா பரவுவதை தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.
நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்துள்ள நிலையில் புதிய வகை கொரோனா தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா குறித்து எடுக்கப்பட்டு உள்ள சுகாதார நடவடிக்கைகள் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-
தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. சுகாதாரத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது. கொரோனா பாதிப்பு கூட 1,2 கேஸ்கள்தான் வருகிறது.
அனைத்து மாவட்டத்திலும் ஏதாவது மாறுபாடான கேஸ் வருகிறதா என்பதை கண்காணித்து தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தீவிரமான தாக்கம் எதுவும் இல்லை. மத்திய சுகாதாரத் துறை இதுபற்றி வேறு எந்த வழிகாட்டுதலையும் தெரிவிக்கவில்லை. கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோருக்கு மரபணு பரிசோதனை செய்யப்படும். அதில் எதுவும் மாற்றம் உள்ளதா? என ஆய்வு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.