ஓசூர் டாடா நிறுவனத்துக்கு வெளி மாநில தொழிலாளர்களை அழைப்பதா? ராமதாஸ் கண்டனம்
- நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
- தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் ஓசூர் பகுதியிலும், கர்நாடகத்தின் கோலார் பகுதியிலும் செயல்பட்டு வரும் டாட்டா மின்னணு நிறுவனத்தின் ஆலைகளில் பணியாற்ற உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 4000 பெண்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாக டாட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏராளமான இளைஞர்களும், இளம் பெண்களும் வேலை கிடைக்காமல் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து ஊழியர்களை இறக்குமதி செய்வது கண்டிக்கத்தக்கது.
தமிழக இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை இன்னொரு மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. அவ்வாறு செய்வதற்கு டாட்டா நிறுவனத்திற்கு உரிமையும் இல்லை.
இந்த நிறுவனத்திற்கு மானிய விலையில் 500 ஏக்கர் நிலம் உட்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கெல்லாம் காரணம் டாட்டா நிறுவனத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மாறாக, டாட்டா மின்னணு நிறுவனம் தமிழ்நாட்டில் ஆலை அமைத்தால், அதன் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மாநில உற்பத்தி மதிப்பு அதிகரிக்கும்; தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைக்கும் என்பதால் தான்.
ஓசூர் டாட்டா மின்னணு ஆலைக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து பணியாளர்கள் நியமிக்கப்படுவதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்; டாட்டா ஆலையில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் தனியார் நிறுவன வேலைகளில் 80 சதவீதம் பணிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்யும் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.