தமிழ்நாடு

காவிரியில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பதை ஏற்க முடியாது- ராமதாஸ்

Published On 2024-07-15 06:42 GMT   |   Update On 2024-07-15 06:42 GMT
  • கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக தினமும் ஒரு டி.எம்.சி (வினாடிக்கு 11,500 கன அடி) தண்ணீரை திறந்து விடும்படி காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆணையிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 8000 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று பெங்களூருவில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகு கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். கர்நாடக அரசின் இந்த நியாயமற்ற முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது.

கபினி அணைக்கு வரும் தண்ணீரை இனி ஒரு மணி நேரம் கூட அணையில் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் அணைக்கு வரும் தண்ணீரில் வினாடிக்கு 8000 கன அடி தண்ணீரை திறந்து விட்டு, மீதமுள்ள நீரை தனது பாசனத் தேவைக்காக கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறது. இப்போதும் தமிழ்நாட்டை தனது வடிகாலாகத்தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, தமிழகத்திற்கு மனமுவந்து தண்ணீர் வழங்கவில்லை.

கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை தி.மு.க. அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும்.

கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை அடுத்த இரு நாட்களுக்குள் கூட்டி, தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அதையும் கர்நாடகம் மதிக்காவிட்டால், தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 20,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News