தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2024-08-06 05:53 GMT   |   Update On 2024-08-06 05:53 GMT
  • சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல.
  • சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூகநீதியில் தமிழகம் பெருமைப்பட்டுக் கொள்ளும் விஷயம் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான். ஆனால், அந்த பெருமை அச்சாணி இல்லாத தேரைப் போலத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. அந்தத் தேர் எப்போது கவிழும் என்பது தெரியாது. ஏனெனில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று 2010-ம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை தமிழக அரசு இன்னும் செயல்படுத்தாத நிலையில், அதை எதிர்த்து புதிய வழக்குகள் தொடரப்பட்டிருப்பது தான். அவ்வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, எந்த நேரமும் 69 சதவீதம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் ஆபத்து இருக்கிறது. அதைத் தடுப்பதற்கான ஒரே தீர்வு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிடுவது தான்.

கல்வியிலும், சமூகநிலையிலும் பின்தங்கிக் கிடக்கும் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாதது எந்த அளவுக்கு மோசமான சமூகநீதியோ, அதை விட மோசமான சமூகநீதி அந்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு பொருந்தாத வகையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான். அதை விடக் கொடுமை, சூறைத் தேங்காயை உடைத்து வலிமையுள்ளவர்கள் பொறுக்கிக் கொள்ளுங்கள் என்பதைப் போல, நூற்றுக்கணக்கான சாதிகளை ஒரே பிரிவில் அடைத்து, மிகக் குறைந்த அளவிலான இட ஒதுக்கீட்டைப் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பது. இவை இரண்டுமே உண்மையான சமூகநீதி அல்ல.

சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் சாதிகளின் வலிமையை கணக்கிடுவது அல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகத்தின் கல்வி, சமூக நிலையை கணக்கிடுவது தான். இந்திய மானுடவியல் கணக்கெடுப்பு நிறுவனம் கடந்த 1985 முதல் 1992 வரை 7 ஆண்டுகள் நடத்திய கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 364 சாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த சாதிகள் குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து அவர்களுக்கு சமூக நீதி வழங்குவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்.

எனவே, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக அனைத்து சமூகங்களும் ஒன்று திரள வேண்டும். நாம் கொடுக்கும் அழுத்தம் ஆட்சியாளர்களை அசைத்துப் பார்க்கும். அந்த நம்பிக்கையுடன் தமிழகத்தின் அனைத்து சமுதாயங்களும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News