தொழில் முதலீடுகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்... ராமதாஸ் வலியுறுத்தல்
- சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது.
- கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு வந்த தொழில் முதலீடுகள் 9.99லட்சம் கோடி மதிப்பில் 889 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதால் 19 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி அறிவுறுத்தி இருந்தேன். ஆனால் முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிடுவது மரபு இல்லை என ஓடி ஒளிவது ஏன்? வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஆயிரம் முறை கோரியுள்ளார். அப்போது எந்த மரபுகளின் அடிப்படையில் கோரினார். கடந்த 3 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகள் தொடங்க ஒப்பந்தம் போட்டாலும் ரூ.17 ஆயிரத்து 616 கோடி மட்டும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. வராத முதலீடுகளை வந்ததாக கூறி மக்களை ஏமாற்றக்கூடாது. எனவே இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பதவிகள் நியமனம் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டினேன். அதன்படி பல பதவிகளில் பலர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை செயலக சங்கம் கூறியுள்ளது. நியமனம் செய்யப்பட்டவர்களை தேர்வு செய்ய எந்த போட்டி தேர்வும், இட ஒதுக்கீடும் கடைபிடிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இது தொடர்பாக அரசு விளக்கமளிக்காவிட்டால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
மருத்துவக்கல்லூரிகள் 13-ல் முதல்வர்கள் பணி காலியாக உள்ளது. சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட கல்லூரிகளில் முதல்வர் பதவி 4 மாதமாக காலியாக உள்ளது. உடனே நியமிக்கவேண்டும் என்று கடந்த 16-ந்தேதியே பா.ம.க வலியுறுத்தியது. இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றம் முதல்வர்களை நியமிக்க முடியவில்லை என்றால் ஏன் மருத்துவக்கல்லூரியை திறக்கிறீர்கள் என்று கூறியுள்ளது. இனியும் தாமதிக்காமல் முதல்வர் நியமிக்கவேண்டும்.
தமிழகத்தில் சன்ன அரிசி ரூ.75 ஆகவும், மோட்டா அரிசி ரூ.65 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 99 லட்சம் டன் தேவையாக உள்ளது. ஆனால் 72 லட்சம் டன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அரிசி உற்பத்தி செய்ய மின் கட்டணத்தை குறைக்கவேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவேண்டும்.
ரூ. 2 லட்சத்துக்கு 2 1/2 ஆண்டுகளில் ரூ.2.26 கோடி வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. கந்துவட்டி கொடுமைகள் தீரவில்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது. இது மாதத்திற்கு 300 சதவீதமாகும். கந்துவட்டி திமிங்கலத்துடன் காவல்துறை இணைந்து செயல்படுவதால் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு நீதிமன்றம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடுமையான கந்துவட்டி சட்டத்தை அரசு நிறைவேற்றவேண்டும்.
தமிழகத்தில் மெல்லும் புகையிலை தடை செய்யப்பட்டு இருந்தாலும் தடையின்றி விற்பனை செய்யப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பே கூல் லிப் புகையிலை விற்பனை தொடங்கியபோதே எச்சரித்தேன். ஆனால் இன்று பள்ளி மாணவர்கள் சகஜமாக பயன்படுத்துகிறார்கள். 10 பல்கலை கழகத்தில் பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. பட்டமளிப்பு விழா நடத்தாமல் இருப்பதால் மாணவர்களை பட்டம் செய்து விட்டுகொள் என்று அரசு சொல்கிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.