பதிவு கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு: அடுக்குமாடி குடியிருப்பு வீடு விலை உயர்கிறது
- தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும்.
- விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
சென்னை:
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 9 சதவீத தனிப்பதிவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பதிவு கட்டணத்துடன் இந்த புதிய கட்டண விகிதம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை உயர வாய்ப்புள்ளது. உதாரணத்துக்கு ரூ.50 லட்சத்துக்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கும் நிலையில் விற்பனை பத்திரத்துக்காக நிர்ணயிக்கப்படும் கட்டணத்தில் 9 சதவீதம் மற்றும் கட்டுமான கட்டணமாக 4 சதவீதம் என தோராயமாக ரூ.2.35 லட்சம் செலுத்தினால் போதுமானதாக இருந்தது.
தமிழக அரசின் புதிய உத்தரவின்படி அடுக்குமாடி குடியிருப்பின் மொத்த விலையில் 9 சதவீத தனிப்பதிவு கட்டணத்தை கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது ரூ.50லட்சம் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புக்கு 4.5 லட்சம் அளவுக்கு தனி பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சரியான முறையில் கட்டணத்தை வசூலிக்கவும், முறைகேட்டை தடுக்கவும் இத்தகைய தனிப்பதிவுக் கட்டணம் விதிக்கப்படுவதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளை அனைத்து சார் பதிவாளர்களுக்கு வழங்குமாறு பத்திரப்பதிவு துறை தலைவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.