தமிழ்நாடு

பனி, குளிர் அதிகமாக இருப்பதால் சென்னையில் அதிகளவில் குழந்தைகளை தாக்கும் சுவாச பாதை கிருமி தொற்று

Published On 2023-01-25 05:51 GMT   |   Update On 2023-01-25 05:51 GMT
  • குழந்தைகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று பாதிப்பு வழக்கமாக ஏற்படும்.
  • சளி, இருமல், தொண்டை வலியுடன் மூச்சு விடவும் சிரமம் ஏற்படும்.

சென்னை:

குளிர் காலத்தில் பொதுவாக குழந்தைகள், பெரியவர்கள் சளி, இருமல் தொந்தரவால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். பருவமழை காலம் முடிந்தவுடன் குளிர், பனி தற்போது அதிகமாக உள்ளது.

இதனால் குழந்தைகள், சிறுவர்கள் சுவாச தொற்று கிருமியால் பாதிக்கப்படுகிறார்கள்.

சென்னையில் வழக்கத்தை விட இந்த ஆண்டு சுவாச பாதை தொற்று அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள்.

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு இருமல், தும்மல் வரும்போது, எளிதாக பரவி விடுகிறது.

எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை, அப்பல்லோ மருத்துவமனை மற்றும் தனியார் கிளினிக்குகளில் சளி, இருமல் பாதிப்புடன் குழந்தைகள் அதிகம் வருவதாக தெரிவிக்கின்றனர்.

வழக்கத்தை விட அதிகமாக குழந்தைகள் சிகிச்சைக்கு வருவதால் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் எழிலரசி கூறியதாவது:-

குழந்தைகளுக்கு நவம்பர், டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று பாதிப்பு வழக்கமாக ஏற்படும். சளி, இருமல், தொண்டை வலியுடன் மூச்சு விடவும் சிரமம் ஏற்படும். லேசான காய்ச்சல் பாதிப்பு போன்ற அறிகுறிகளுடன் இந்த தொற்று பாதிப்பை ஏற்படுத்தும்.

குழந்தைகள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த வருடம் சற்று கூடுதலாக வருகிறார்கள். இது ஒரு வைரஸ் கிருமிதான். இதனால் பயப்பட தேவையில்லை. வழக்கமாக டிசம்பர் மாதத்தில் சுவாச தொற்று கிருமி குறைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு இந்த மாதமும் கூடுதலாகி வருகிறது.

மருத்துவமனைக்கு சராசரியாக தினமும் 1200 குழந்தைகள் வருகிறார்கள். தற்போது சற்று கூடியுள்ளது. சுவாச தொற்று பாதிப்பு ஒரு வாரத்தில் குணமாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் டாக்டர் செந்தில்பிரபு கூறியதாவது:-

பனி, குளிர் காலத்தில் சுவாச பாதை தொற்று கிருமி குழந்தைகளை தாக்கும். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். காய்ச்சல், தொண்டை வலி, உடல் வலி, இருமலுடன் மூச்சு திணறலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும். சிலருக்கு வீசிங் வரும். அத்தகைய பாதிப்பு உள்ள குழந்தைகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் வழக்கமான அளவில்தான் பாதிப்பு உள்ளது.

4 நாட்கள் காய்ச்சல் பாதிப்பு இருந்து சரியாகும். ஆனாலும் சளி, இருமல் 2 வாரம் வரை கடுமையாக இருக்கும்.

இந்த பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கூட்டமான இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிவது நல்லது. புளு தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பது நல்லது. குளிர் காலத்தில் பரவக் கூடிய இந்த வைரசால் உயிருக்கு ஆபத்து இல்லை. சிறுவர்களை மட்டுமின்றி முதியவர்களையும் இந்த வைரஸ் தாக்கக் கூடியது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News