கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது- அரிசி மூட்டை விலை ரூ.100 அதிகரிப்பு
- கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை ரூ.1,100, ரூ.1,200-க்கு விற்கப்பட்ட சாப்பாட்டு அரிசி வகைகள் படிப்படியாக விலை உயர்ந்து இப்போது ரூ.1400 வரை வந்து விட்டது.
- உயர் தரமான இட்லி அரிசி மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.1,050-ஆக கூடியுள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் உணவு பொருட்களின் விலை கடந்த 2 மாதமாக கூடி வருகிறது. அரிசி முதல் மளிகைப் பொருட்கள் வரை விலை உயர்ந்துள்ளது.
சமையல் எண்ணெய், பருப்பு வகைகள் விலை அதிகரித்துள்ளன. பொருட்களை கொண்டு வரக்கூடிய போக்குவரத்து செலவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
வரலாறு காணாத வகையில் காய்கறி விலைகளும் அதிகரித்தன. விளைச்சல் குறைவு, மழை காரணமாக எல்லா காய்கறிகளும் விலை உயர்வாக உள்ளன.
இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்கப்படுகிறது. தக்காளி இன்னும் ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது.
இந்த நிலையில் அரிசி விலை மீண்டும் உயர்ந்து உள்ளது. இதுவரையில் பாசுமதி அரிசி விலை உயராமல் இருந்தன. கடந்த வாரம் அதன் விலையும் மூட்டைக்கு ரூ.400 கூடியுள்ளது. ரூ.3 ஆயிரத்து 500-ஆக இருந்த பாசுமதி மூட்டை ரூ.3 ஆயிரத்து 900-ஆக உயர்ந்து உள்ளது.
இட்லி அரிசியும் மூட்டைக்கு ரூ.100 உயர்ந்தது. ரூ.850-க்கு விற்கப்பட்ட 26 கிலோ மூட்டை ரூ.950-ஆக அதிகரித்தது.
உயர் தரமான இட்லி அரிசி மூட்டை ரூ.900-ல் இருந்து ரூ.1,050-ஆக கூடியுள்ளது.
சாப்பாட்டு அரிசி விலை மூட்டைக்கு ரூ.100 அதிகரித்துள்ளது. 26 கிலோ எடை கொண்ட சாப்பாட்டு அரிசி விலை கடந்த வாரம் வரை ரூ.1,250-க்கு விற்கப்பட்டது. அவற்றின் விலை தற்போது ரூ.1,350 ஆக உயர்ந்தது.
சில அரிசி ரகங்கள் ரூ.1,400-ல் இருந்து ரூ.1,500 ஆகவும் கூடியது. மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.150 வரை உயர்ந்து உள்ளது.
கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை ரூ.1,100, ரூ.1,200-க்கு விற்கப்பட்ட சாப்பாட்டு அரிசி வகைகள் படிப்படியாக விலை உயர்ந்து இப்போது ரூ.1400 வரை வந்து விட்டது.
இதுகுறித்து கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் பொன்ராஜ் கூறியதாவது:-
எங்கள் கடையில் மொத்தமாகவும் சில்லரையாகவும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 மாதமாக அரிசி விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருகிறது. சாப்பாடு, இட்லி அரிசி விலை உயர்ந்து வந்த நிலையில் இப்போது பாசுமதி அரிசி விலையும் கூடிவிட்டது. கிலோவுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. மாதந்தோறும் மளிகைப் பொருட்கள் வாங்கக் கூடிய வாடிக்கையாளர்கள் விலை உயர்வால் கஷ்டப்படுகிறார்கள்.
இதனால் மூட்டையாக வாங்கக் கூடியவர்கள் சில்லரையில் 5 கிலோ, 10 கிலோ பாக்கெட்டாக வாங்கி செல்வதை பார்க்க முடிகிறது.
சிவாஜி பிராண்ட் சாப்பாட்டு அரிசி (26 கிலோ) ரூ.1,500-ல் இருந்து ரூ.1,600-ஆகவும், கிருஷ்ணா ரூ.1200-ல் இருந்து ரூ.1,300-ஆகவும் கூடியுள்ளது.
அரிசி விலை உயர்வுக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் மொத்த வியாபாரிகள் விலையை உயர்த்தும் போது நாங்களும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.