தமிழ்நாடு

சென்னையில் அரிசி விலை மூட்டைக்கு ரூ.200 உயர்வு

Published On 2023-11-01 05:10 GMT   |   Update On 2023-11-01 05:10 GMT
  • அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • டிசம்பர் மாதம் வரை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை:

தமிழகத்தில் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. சாப்பாடு அரிசி, இட்லி அரிசி, பச்சரிசி உள்ளிட்ட அனைத்து வகையான அரிசி விலையும் உயர்ந்தது. கடந்த 2 வாரமாக அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் மாவட்ட பகுதியில் அனைத்து அரிசி வகையும் 25 கிலோ மூட்டை ரூ.200 வரை அதிகரித்துள்ளது.

ரூ.900 ஆக இருந்த சாப்பாடு அரிசி கடந்த 10 நாட்களில் 50 ரூபாய் வீதம் படிப்படியாக அதிகரித்து தற்போது ரூ.1100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.1200 ஆக இருந்த உயர்ரக சாப்பாடு அரிசி மூட்டை ரூ.1400 ஆக அதிகரித்தது. ரூ.1400 ஆக இருந்த மூட்டை ரூ.1550 வரை உயர்ந்தது.

பச்சரிசி 26 கிலோ மூட்டை ரூ.1350ஆக இருந்தது. கிலோ 56க்கு விற்கப்பட்டது. தற்போது மூட்டை ரூ.1450 ஆக கூடியுள்ளது. இதே போல் இட்லி அரிசி விலையும் அதிகரித்தது. அரிசி விலை உயர்வுக்கு நெல்வரத்து பற்றாக்குறையானதே காரணம் என்று அரிசி உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரக்கூடிய நெல் வரத்து குறைந்ததால் அரிசி இருப்பு குறைந்தது. இதுவே விலை உயர காரணமாக அமைந்து உள்ளது.

இதுகுறித்து முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்த அரிசி வியாபாரி ஆனந்த ராஜ் என்பவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விளைச்சல் ஆகும் நெல் அந்த பகுதிக்கே போதுமானதாக உள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் நெல்லை நம்பி தான் தமிழக மக்களின் தேவை சமாளிக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து நெல் வரத்து வருவது குறைந்து உள்ளது. 100 லாரி நெல் வர வேண்டிய இடத்தில் 10 லாரி வருகிறது. இதனால் தான் அரிசி விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.

ஆரணியிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. டிசம்பர் மாதம் வரை விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி மாதம் புது நெல் வந்தபிறகு தான் விலை குறையலாம். ஆனாலும் பழைய அரிசிக்கு தான் தேவை அதிகரிக்கும். எனவே ஜனவரி மாதம் வரை அரிசி விலை உயர்வாக இருக்கும்.

அரிசி விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிசி கிலோவுக்கு ரூ.7 வரை உயர்ந்து உள்ளது. மழைக்காலம் தொடங்கி இருப்பதால் அரிசி விலை குறைய வாய்ப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News