சென்னையில் பல இடங்களில் சாலைகள் சேதம்: குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதி
- பெருங்குடியில் 1 கி.மீ. தூரம் சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது.
- அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன.
சென்னை:
சென்னையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்கிறது. சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகிறது. மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் சேதம் அடைந்த சாலைகள் தற்போது போடப்பட்டு உள்ளன.
மேலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காகவும் சாலைகளில் பல இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டு உள்ளது. முழுமையாக பணி முடிந்த இடங்களில் சாலைகள் போடப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன. அந்த பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
தாம்பரம்- வேளச்சேரி மெயின் ரோட்டில் நாராயணபுரம்- வேளச்சேரி இடையே 1.5 கி.மீ. தூரம் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த இடங்களில் 2 இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன. ஆனால் சாலை முழுக்க மோசமான நிலையில் உள்ளது. மழைநீர் வடிகால் பணி மட்டுமின்றி மற்ற துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்காகவும் சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
பெருங்குடியில் 1 கி.மீ. தூரம் சாலை போக்குவரத்துக்கு பயனற்றதாக உள்ளது. குடிநீர் வாரிய பணிகள் முடிந்ததும் சாலையின் ஒரு பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதனால் மற்ற பகுதிகள் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள இணைப்பு சாலைகளை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் மழை காலங்களில் இந்த சாலையை பயன்படுத்துவது சிரமமாக மாறிவிடும். அந்த அளவுக்கு சாலை குண்டும் குழியுமாகவும், சேறு- சகதியாகவும் காணப்படுகிறது.
அசோக் நகரில் உள்ள டாக்டர் நடேசன் சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் முடிந்துள்ளன. அதன் பிறகு சாலை குண்டும் குழியுமாக மாறிவிட்டது. சுமார் 400 மீட்டர் தூரத்துக்கு இந்த சாலை மோசமான நிலையில் உள்ளது.
அம்பத்தூர் எஸ்டேட் சாலையில் உள்ள ஆபீசர்ஸ் காலனி சந்திப்பு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை சென்னை நகரின் மிகவும் பரபரப்பான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதுபோல சென்னையில் பல பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
சென்னையில் பல சாலைகள் மழைக்கு பிறகு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி கிடக்கும் போது சாலையில் உள்ள பள்ளங்கள் தெரியாததால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தை சந்திக்கிறார்கள். எனவே போர்க்கால அடிபடையில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறுகையில், 'சென்னையில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் முன்னுரிமை அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருகிறது. தேவையான இடங்களில் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார்.