ஓட்டலில் உணவு விநியோகிக்கும் பணியில் ரோபோ
- உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
- கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.
உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்படுகிறது. பின்னர் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு செல்லும் வகையில் ஒவ்வொரு டேபிளுக்கான எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்து செல்கிறது.
பின்னர் ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்களே உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,
சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஹேப்பி பர்த்டே என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.