தமிழ்நாடு

ரூ.2 கோடி நகை மோசடி பணத்தில் கேரளாவில் அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்த அடகு கடை ஊழியர்கள்

Published On 2024-01-04 06:48 GMT   |   Update On 2024-01-04 06:48 GMT
  • கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
  • ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர்.

திருப்பூர்:

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் சுரேஷ்பாண்டியன் (வயது 32). இவர் திருப்பூர் கரட்டாங்காடு, ராக்கியாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரது அடகு கடையில் பொள்ளாச்சியை சேர்ந்த அருண்குமார் (25), திருப்பூர் கே.செட்டிப்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் (26) ஆகியோர் ஊழியராக வேலை செய்து வந்தனர். அருண்குமாரின் நண்பர் பொள்ளாச்சியை சேர்ந்த பிரதீப் (27).

சுரேஷ்பாண்டியன் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அடகு கடையில் உள்ள இருப்பு நகைகள், அடகு விவரங்களை சரிபார்ப்பது வழக்கம். அதன்படி கரட்டாங்காடு நகை அடகு கடையில் நகை இருப்பு விவரங்களை சுரேஷ்பாண்டியன் சரிபார்த்தார். இதில் அடகு வைத்த ரசீதில் குறிப்பிட்ட பணத்தை விட நகை இருப்பு குறைவாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கடை ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். இதில் அவர்கள் முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது. இவ்வாறு கடந்த 2020-ம் ஆண்டு முதல் ரூ.80 லட்சத்தை முறைகேடு செய்தது தெரியவந்தது.

இது குறித்து சுரேஷ் பாண்டியன் திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். துணை போலீஸ் கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பத்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், காளிமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் அருண்குமார், சக்திவேல், பிரதீப் ஆகிய 3 பேரை தெற்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. நகை அடகு கடையில் வாடிக்கையாளர்கள் நகையை அடகு வைத்தது போல் போலியான ரசீது தயாரித்து நகையை வைக்காமலேயே பணத்தை மட்டும் எடுத்து செலவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சுரேஷ் பாண்டியன் கணக்கு பார்க்கும்போது மட்டும், ரசீதுக்கு ஏற்ப நகைகளை, மற்றொரு கிளையான ராக்கியாபாளையம் நகை அடகு கடையில் இருந்து கொண்டு வந்து சரிகட்டியுள்ளனர். மேலும் பிரதீப்பும் கொஞ்சம் நகையை கொடுத்து மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார். இவ்வாறு 2020-ம் ஆண்டு முதல் மொத்தம் ரூ.80 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.24 லட்சம் மதிப்புள்ள நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோபிநாத் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். அவர் சுரேஷ்பாண்டியனுக்கு சொந்தமான நல்லூர் கிளை நகை அடகுக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். அவர் 2.50 கிலோ எடையுள்ள 304 பவுன் நகைகளை இங்கிருந்து வேறு ஒரு நகைக்கடையில் அடகு வைத்து ரூ.1.20 கோடி வரை மோசடி செய்துள்ளது தெரியவந்தது. கைதான 4 பேரும் நகை மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கடந்த தீபாவளி அன்று 4 பேரும் கேரளாவுக்கு சென்றதுடன் அங்குள்ள ரிசார்ட்டில் அழகிகளுடன் தங்கி உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு அழகிகளுக்கும் தினசரி ரூ.20ஆயிரம் கொடுத்துள்ளனர். ரிசார்ட் வாடகையாக ஒரு நாளைக்கு ரூ.40ஆயிரம் செலுத்தியுள்ளனர். மேலும் சொகுசு காரில் உல்லாசமாக வலம் வந்துள்ளனர். கேரளாவில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழகிகளுடன் சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். கைதான ஒருவர் தனது கள்ளக்காதலிக்கு சொந்த செலவில் மருந்து கடை ஒன்றை வைத்து கொடுத்துள்ளார்.

கைதான கோபிநாத் ஆடிட்டர்கள் நகைகடைக்கு ஆய்வு செய்ய வருவதை அறிந்ததும் மோசடி செய்த நகைகளுக்கு பதில் சேலத்தில் உள்ள தனது நண்பரின் கடையில் இருந்து நகைகளை வாங்கி கொண்டு வந்து வைத்து கணக்கு காட்டியுள்ளார். இப்படியாக தொடர்ந்து கோபிநாத் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்தநிலையில் நகைகளை அடகு வைத்த வாடி க்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது நகைகளை மீட்டு கொடுக்குமாறு போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். எனவே கைதான 4 பேரும் எவ்வளவு நகை, பணம் மோசடி செய்துள்ளனர் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News