தமிழ்நாடு

சென்னை முதல் குமரி வரை 2 நாட்கள் நடக்கிறது- கடலோர பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை

Published On 2023-06-29 11:02 GMT   |   Update On 2023-06-29 11:02 GMT
  • சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் இன்று பரபரப்பாக காணப்பட்டன.
  • கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதே ஒத்திகையின் நோக்கமாகும்.

சென்னை:

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை 'சாகர் கவாச் ஒத்திகை' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டின் முதல் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது.

கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படையினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் இன்று காலையில் பரபரப்பாக காணப்பட்டன.

பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் கடலோர பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ஊடுருவுவார்கள் அவர்களை மாநில போலீசார் மடக்கி பிடிப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் பாதுகாப்பு ஒத்திகையில் கோட்டைவிடும் போலீசார் மீது நடவடிக்கை பாயும். கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த ஒத்திகையின் நோக்கமாகும்.

சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவொற்றியூர், எண்ணூர், கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய கடல் பகுதிகள் போன்றவற்றிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

சென்னை மாநகரையொட்டிய கடல் பகுதிகளில் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர காவல்படை கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி மற்றும் அதிகாரிகள் ஒத்திகையை நடத்தி வருகிறார்கள். இன்று தொடங்கி இருக்கும் இந்த ஒத்திகை 2 நாட்கள் நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News