சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும்- உதயநிதி ஸ்டாலின் பேட்டி
- தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார்.
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மஸ்தான் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழா, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதுபோல் தெரியவில்லை. இதனை அமல்படுத்த வேண்டுமென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம்.
தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார். எனவேதான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் எப்போதும் இருக்கக்கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதான விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.