தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணையை தாமதமாக்குகின்றனர் - சி.பி.ஐ. புகார்

Published On 2023-04-19 10:13 GMT   |   Update On 2023-04-19 10:13 GMT
  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.
  • குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர்.

மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்து பின் சி.பி.ஐ. போலீசார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர். 47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளது. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்கி வருகின்றனர். ஒரு சாட்சியை விசாரணை செய்வதற்கு கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகின்றனது.

எனவே மே மாத நீதிமன்ற விடுமுறை காலத்திலும் இந்த வழக்கினை கீழமை நீதிமன்றம் விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் வழக் கினை தீர்ப்பிற்காக வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags:    

Similar News