விஜய்யின் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை- செல்லூர் ராஜூ
- அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர்.
- கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை திண்டுக்கல் ரோடு, நேதாஜி ரோடு பகுதியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வுக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்திற்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்ச ருமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து தொடர்ந்து மக்களின் மீது வரிச் சுமைகளை ஏற்றி வருகிறது. தற்போது ஆண்டு தோறும் 6 சதவீத சொத்து வரி உயர்வினை மக்கள் மத்தியில் திணித்துள்ளது. இது மட்டுமல்ல மின்கட்டணம் உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளும் அதிகரித்துவிட்டன. ஆனால் முதலமைச்சர் இதுபற்றி எதுவும் கவலைப்படாமல் தனது தந்தை பெயரில் பூங்கா திறப்பதை சாதனையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மகன் உதயநிதியை துணை முதலமைச்சராக்கி அழகு பார்க்கிறார். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வர வாக்களித்த மக்கள் மீது வரிக்கு மேல் வரியை போட்டு வருகிறார். வரிக் குதிரையின் உடம்பில் உள்ள வரியை விட தமிழக மக்கள் மீது சுமத்தப்பட்ட வரியே அதிகமாக உள்ளது.
தி.மு.க. ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டன. இதனை தான் கவர்னர் ஆர்.என்.ரவி தெளிவாக கூறியிருக்கிறார். முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பு இனிப்பு மிட்டாய்கள் தான் விற்கப்படும். ஆனால் தற்போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பிள்ளைகளை விடுதியில் தங்க வைத்து படிக்க வைக்க கூட பெற்றோர்கள் அஞ்சுகிற சூழ்நிலையை தி.மு.க. அரசு உருவாக்கி உள்ளது.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர். அவரைப் பற்றி இப்போது பேசுவது பொருத்தம் அல்ல. நடிகர் விஜய் இப்போதுதான் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். மாநாட்டின் போது தான் அவரது கொள்கை கோட்பாடு பற்றி தெரியும். அப்போது தான் அவரது கட்சியை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். விஜய்யின் புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
சென்னை மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியின் போது 5 உயிர்கள் பறிபோய் உள்ளது. இதை மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்க முடியும். ஒவ்வொரு இடங்களிலும் உரிய பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு எத்தனை பேர் அங்கே அனுமதிக்கப்பட வேண்டுமோ அத்தனை பேரை மட்டுமே அனுமதித்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது. ஆனால் இதுபோன்று கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான எந்த நடவடிக்கையும் மாநில அரசு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.