தமிழ்நாடு

சிறுபான்மையினரின் 42 ஆயிரம் வாக்குகளை அ.தி.மு.க. இழந்ததாக எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர்- செங்கோட்டையன் குற்றச்சாட்டு

Published On 2023-03-14 10:24 GMT   |   Update On 2023-03-14 10:24 GMT
  • முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.
  • தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ். தென்னரசும் போட்டியிட்டனர்.

அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ஜனதா ஆதரவு தெரிவித்திருந்தது. அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாட்கள் பிரசாரம் மேற்கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1 லட்சத்து 10,156 வாக்குகள் பெற்றார். அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ். தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த வெள்ளி திருப்பூரில் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

முன்னாள் முதல்-அமைச்சர்கள் மறைந்த எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தனர்.

குறிப்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பள்ளி மாணவர்களுக்காக லேப்டாப், சைக்கிள் திட்டங்களை கொண்டு வந்தார். தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற திட்டங்கள் பெண்களிடம் அமோக வரவேற்பு பெற்றன. ஆனால் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற முதல் அ.தி.மு.க திட்டங்களை நிறுத்தி வருகிறது.

தற்போது பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்றவற்றால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் தான் 42 ஆயிரம் சிறுபான்மை ஓட்டுக்களை நாம் இழந்து விட்டதாக எதிர்க்கட்சியினர் பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

அவர்கள் ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இதே தி.மு.க.வினர் தான் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் பா.ஜனதாவுடன் 5 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தனர் என்பதை மறந்து விடக்கூடாது. அ.தி.மு.க. என்றும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாகவே இருந்து வரும் கட்சியாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News