நாளை ஆடி கிருத்திகை- திருத்தணிக்கு சிறப்பு ரெயில், பஸ் வசதி
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
- 3 நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னை:
ஆடி கிருத்திகை என்னும் விசேஷ நாள் நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை மிக விமரிசையாக கொண்டாடப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திருத்தணி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.
பக்தர்கள் வசதிக்காக திருத்தணிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நேற்று 10-ந் தேதி வரை காஞ்சிபுரம் மண்டலம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 3 நாட்கள் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்த்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் இருந்து திருத்தணிக்கு கூடுதலாக 100 பேருந்துகளும், அரக்கோணம்-திருத்தணி 25, சென்னை-திருத்தணி 100, திருப்பதி-திருத்தணி 75 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் அதற்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கவும் திட்டமிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பு பயணிகள் ரெயிலும் இயக்கப்படுகிறது. அரக்கோணம்-திருத்தணி இடையே 3 சிறப்பு ரெயில்கள் விடப்பட்டு உள்ளது. இன்று (8-ந் தேதி) முதல் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்படும் சிறப்பு மின்சார ரெயில் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.