தமிழ்நாடு

கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும் 4-வது அலை வர வாய்ப்பே இல்லை

Published On 2022-06-15 06:23 GMT   |   Update On 2022-06-15 08:19 GMT
  • இந்தியாவில் ஒமைக்ரான் தான் பரவி இருக்கிறது.
  • 3 அலைகளின் போது கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருந்தது.

சென்னை:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. குறிப்பாக கொரோனாவின் புதிய வடிவமான ஒமைக்ரான் அதிகளவில் பரவி இருப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

மகாராஷ்டிரா, கேரளாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறி இருக்கிறது. இதன் எதிரொலி தமிழகத்திலும் பிரதிபலிக்கத் தொடங்கி உள்ளது.

தமிழகத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 255 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று பாதிப்பு எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது.

3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு 300-ஐ கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி 320 பேர் தொற்றுக்கு ஆளானார்கள். அதேநிலை தற்போது உருவாகி உள்ளது.

சென்னையில் மட்டும் 177 பேர் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணிக்கை 1632 ஆக உள்ளது. தொடர்ந்து இது உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை கருத்தில் கொண்டு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகப்படுத்தி வருகிறார்கள். என்றாலும் மருத்துவமனையில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழகத்தில் 4-வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் உருவாகி இருக்கிறது.

இதுதொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் கொரோனா 4-வது அலை வருவதற்கு வாய்ப்பே இல்லை' என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.

பிரபல தொற்றுநோய் தடுப்பு நிபுணர் டாக்டர் ஜேக்கப் ஜான் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா தாக்கம் உருவாகி 3 அலைகள் உருவான போது இருந்த நிலைக்கும், தற்போதைய சூழ்நிலைக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. 3 அலைகளின் போது கொரோனா பரவல் வேகம் மிக அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது அதில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தால் மறுநாள் அந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறது. கொரோனா வைரஸ் பரவல் இப்படி ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது பரவி வரும் ஒமைக்ரான் சாதாரண பாதிப்பை உருவாக்குகிறது. அப்படி பாதித்தாலும் விரைவில் குணமடைந்து விடும் நிலையை மக்கள் பெற்றுள்ளனர்.

இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் 4-வது அலை வராது. தற்போது உருவாகி இருப்பது சற்று ஏற்ற இறக்கம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையை சேர்ந்த மணிகண்டன் நேசன் கூறுகையில், 'இந்தியாவில் ஒமைக்ரான் தான் பரவி இருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி உள்ளது. நமது நாட்டில் சாதாரண பாதிப்பு உள்ளதால் 4-வது அலைக்கு வாய்ப்பு இல்லை' என்றார்.

பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் கூறுகையில், 'தமிழகத்தில் முதியவர்கள் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் பூஸ்டர் டோஸ் போடாமல் இருப்பது கவலை தருகிறது. என்றாலும் தற்போது ஏற்படும் அதிகரிப்பை கருத்தில் கொண்டு 4-வது அலை வரும் என்று சொல்லவே இயலாது.

அதற்காக மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்லும் போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News