தமிழ்நாடு (Tamil Nadu)

திருவள்ளூர் அருகே சுடுகாடு இடம்கேட்டு இறந்தவர் உடலை சாலையோரம் எரித்து கிராம மக்கள் போராட்டம்

Published On 2023-04-07 10:08 GMT   |   Update On 2023-04-07 10:55 GMT
  • காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர்.

திருவள்ளூர்:

திருப்பதியில் இருந்து நெமிலிச்சேரி வரை ரூ.364 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த சாலை திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் பொது மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த சுடுகாடு வழியாக செல்கிறது. இதையடுத்து அந்த சுடுகாடு நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த இடத்தில் உடல்களை எரிக்கவும், புதைக்கவும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது சுடுகாடு இருந்த இடத்தில் இருந்த செடிகள் முழுவதும் அகற்றப்பட்டு உள்ளது.

மேலும் காக்களூர் பகுதி மக்களுக்கு அருகில் உள்ள மற்றொரு சுடுகாட்டை பயன்படுத்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதனை ஏற்கனவே பயன்படுத்தி வரும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால் காக்களூர் பகுதி மக்கள் தங்களுக்கு தனியாக சுடுகாடு நிலம் ஒதுக்கி தரவேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று தெரிகிறது.

இதற்கிடையே காக்களூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன்(48) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார். சுடுகாடு நிலம் வழங்காததை கண்டித்து அவரது உடலை அப்பகுதியில் 4 வழிச்சாலை பணி நடக்கும் இடம் அருகே சாலையோரம் திடீரென எரித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் வட்டாட்சியர் மதியழகன், திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுடுகாடு நிலம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags:    

Similar News