உடுமலை அமராவதி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மற்றும் சிறு சிறு ஓடைகள் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
அதை ஆதாரமாகக்கொண்டு பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன திட்டத்தின் கீழ் திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து அணை முழு கொள்ளளவை அடைந்து அமராவதி பிரதான கால்வாய் மற்றும் ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டில் போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்து 422 கன அடியில் இருந்து 1,619 கன அடியாக அதிகரித்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 57.29 அடியில் இருந்து 59.65 அடியாக அதிகரித்து ஒரே நாளில் 2.34 அடி உயர்ந்துள்ளது. மேலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான சூழல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் தண்ணீரின் சீற்றம் அதிகமாக உள்ளதால் அதில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.