தமிழ்நாடு (Tamil Nadu)

திண்டிவனம் அருகே வேன் கவிழ்ந்து சென்னை ஐயப்ப பக்தர்கள் 18 பேர் காயம்

Published On 2023-01-08 04:07 GMT   |   Update On 2023-01-08 04:07 GMT
  • வேன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
  • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்தது.

திண்டிவனம்:

சென்னை தாம்பரம் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று நள்ளிரவில் ஒரு வேனில் 22 பேர் சபரிமலைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த வேனை டிரைவர் சந்திரசேகர் ஓட்டினார்.

அந்த வேன் இன்று அதிகாலை 5.15 மணியளவில் திண்டிவனம் டி.வி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வேன் தலைகுப்புற பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 8 வயது சிறுமி உள்பட 18 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அந்த வழியாக வாகனத்தில் வந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்சு மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் 18 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News