தமிழ்நாடு (Tamil Nadu)

விபத்தில் காயமடைந்த 4 வயது குழந்தையை தோளில் தூக்கி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்த சென்னை பெண்

Published On 2023-01-09 05:44 GMT   |   Update On 2023-01-09 05:44 GMT
  • விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
  • தந்தை, மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

வேலூர்:

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 36) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகன் நிஷாந்த் (4) நேற்று முன்தினம் இவர்கள் வேலூர் ஆர் என் பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தனர்.நேற்று மாலை மீண்டும் காஞ்சிபுரத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர்.

சத்துவாச்சாரி வசூரில் உள்ள அம்மன் கோவில் எதிரே சென்றபோது பின்னால் வந்த பைக் சரவணன் பைக் மீது மோதியது.இந்த விபத்தில் சரவணன் மற்றும் நிஷாந்த் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அதேபோல பின்னால் பைக்கில் வந்த இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் கீதா அவரது 16 வயது மகன் காரில் சென்னை நோக்கி வந்தனர்.

விபத்தை பார்த்த உடனே அவர்கள் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர். 4 வயது குழந்தையை மீட்டு காலதாமதம் இன்றி முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அந்த நேரத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் அந்த வழியாக வந்தனர். அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தனர்.

காயமடைந்த நிஷாந்துக்கு கீதா விரைவாக ரத்தினகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல போலீஸ் சூப்பிரண்டு தனது காரை வழங்கினார்.

அதில் தந்தை, மகன் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

குழந்தையை கீதா தனது தோளில் சுமந்தபடி வேகமாக தூக்கிக்கொண்டு ஓடி ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தன்னுடைய குழந்தை போல நினைத்து கீதா விபத்தில் காயம் அடைந்த குழந்தையை தூக்கிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்ததை கண்ட டிஐஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

விபத்தில் காயம் அடைந்தவர்களை விரைவாக சேர்ப்பதன் மூலம் விலை மதிப்பில்லாத உயிரை காப்பாற்றலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News