தமிழ்நாடு

இலவச பஸ் பயணத்துக்காக தினமும் ரூ.60 வரை செலவழிக்கும் பெண்கள்

Published On 2023-03-17 07:37 GMT   |   Update On 2023-03-17 07:37 GMT
  • தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
  • புழல் பகுதியில் வசிக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் அரசின் இலவச பஸ் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழக அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது பயணச் செலவு கணிசமாக மிச்சமாகி இருப்பதாக கூறி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் புழல் பகுதியில் வசிக்கும் பல்வேறு கிராமங்களை சேர்ந்த பெண்கள் அரசின் இலவச பஸ் பயணத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.

திருவொற்றியூரில் இருந்து செங்குன்றத்துக்கு விளாங்காடுப்பாக்கம் கிராமம் வழியாக மாநகர பேருந்து ஒன்று இயக்கப்படுகிறது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இந்த பஸ் வருவதால் அவசரமாக வெளியில் செல்பவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் இந்த பஸ்சை எதிர்பார்ப்பது இல்லை. சிங்கிலிமேடு, தர்காஸ், பெருங்காவூர், அழிஞ்சி வாக்கம், வடகரை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் பெண்கள் செங்குன்றம் போய் அங்கிருந்து தான் மற்ற இடங்களுக்கு பஸ்சை பிடிக்க வேண்டும். முறையான பஸ் வசதி இல்லாததால் இந்த கிராமங்களுக்கு அதிக அளவிலான ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களில் விளாங்காடுப் பாக்கத்தில் இருந்து செங்குன்றம் செல்ல ரூ.30 கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

இப்படி காலை, மாலை 2 வேளையும் இப்பகுதிகளில் பெண்கள் பயணம் செய்ய வேண்டி உள்ளது.

இதனால் தினமும் ரூ.60 வரை செலவு ஆவதாக பெண்கள் குற்றம்சாட்டுகிறார்கள். வருமானத்தின் பெரும் பகுதியை இழப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது பஸ் வசதி இல்லாத பகுதி மக்களின் நலனுக்காக மினி பஸ் இயக்கப்பட்டது. இந்த பஸ் பயணம் இந்த கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

இதனால் தமிழக போக்கு வரத்து துறை அதிகாரிகள் இந்த கிராமங்கள் அடங்கிய வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அப்பகுதி மக்கள் நீண்ட காலமாகவே வைத்து வருகிறார்கள். செலவில்லாத அரசு பஸ் பயணம் இப்பகுதி மக்களுக்கு கை கூடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News