இட நெருக்கடியால் தலைமை செயலகத்தை ஓமந்தூரார் வளாகத்திற்கு மாற்ற அரசுக்கு கோரிக்கை
- சுகாதாரமற்ற நிலையில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வதை பொறுத்து அமையும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
சென்னை:
சென்னை கோட்டையில் உள்ள தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியாக உள்ளதை கருத்தில் கொண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினார். சட்டசபையும் அங்குதான் சிறிது காலம் செயல்பட்டது.
2011-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகம் எண்ணை கிணறு வடிவில் இருப்பதாகவும், இங்கு அனைத்து அலுவலகமும் இயங்க கூடிய அளவுக்கு போதிய வசதிகள் இல்லை என்றும் கூறி அங்கே செல்ல மறுத்து விட்டார்.
அதுமட்டுமின்றி, புதிய தலைமைச் செயலகத்தை அரசினர் பன்னோக்கு உயர் மருத்துவமனையாக மாற்றி விட்டு சட்டசபையை மீண்டும் கோட்டைக்கு கொண்டு வந்து விட்டார்.
இப்போது தி.மு.க. ஆட்சி நடந்து வரும் நிலையில் தலைமை செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி வருகிறது.
தலைமை செயலகத்தில் இட நெருக்கடி பெரிய பிரச்சினையாக உள்ளதாகவும், சிறிய அறைகளில் நிறைய பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும், அசுத்த காற்று வெளியேற முறையான அமைப்புகள் இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் பணியாளர்கள் பணியாற்றி வருவதாகவும் அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இது அரசின் கொள்கை முடிவு என்பதால் தலைமைச் செயலகம் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமை செயலக கட்டிடத்துக்கு இடம் மாறுமா? இல்லையா? என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வதை பொறுத்து அமையும் என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.