பருவமழை குறித்து ஆலோசனை கூட்டம்- அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரி கேள்வி
- 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
- 7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை" என அமைச்சர் உதயநிதி கேள்வி.
வடகிழக்கு பருவ மழை குறித்த ஆலோசனை கூட்டத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து, அதிகாரிகளிடம் அமைச்சர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், நெடுஞ்சாலை, மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். 7 அமைச்சர்களும் வரிசையாக அமர்ந்து அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்விகளை அடுக்கினர்.
ஆலோசனை கூட்டத்தில், "7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை" என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளை கண்டித்தார்.
மேலும் அவர், "கீழ்கட்டளை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாதது ஏன்? சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் பணிகள் எப்போது முடியும் ?" என கேள்வி எழுப்பினார்.
" ஆரம்பித்துவிட்டோம், முடிப்போன்னு சொல்லிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது. சிரமம் இருந்தால் சொல்லுங்கள், அனைத்து அமைச்சர்களும் இருக்கிறோம், தீர்வு கொடுக்கிறோம். மழை வந்துவிட்டால் எதுவும் செய்ய முடியாது" என அமைச்சர் நேரு தெரிவித்தார்.
தொடர்ந்து, மத்திய அமைச்சர் எம்.பி., தயாநிதி மாறன் பேசுகையில், "சென்ட்ரல் ரெயில் நிலையம் பின்னால் இருக்கும் கல்யாணபுரம் பகுதி ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தால் பாதிக்கிறது. பல முறை சொல்லிவிட்டேன், பல அமைச்சர்களும் நேரில் வந்து பார்த்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
கடந்த மழையின்போது எத்தனை புகார்கள் பெறப்பட்டன. அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? பணம் இல்லை, வேலை நடைபெறவில்லை என்று மக்களிடம் போய் சொல்ல முடியாது" என்றார்.