வக்பு சட்ட திருத்தத்தை கை விட வேண்டும்- தமிமுன் அன்சாரி கோரிக்கை
- மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன.
- அரசு சார்ந்த நிர்வாக பொறுப்புகளில் பிற சமூகத்தவரும் உள்ளனர்.
சென்னை:
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே ராணுவம் மற்றும் ரெயில்வே துறை நிர்வாகங்களுக்கு அடுத்து மிகப்பெரிய சொத்துக்களை கொண்டதாக வக்பு வாரியம் திகழ்கிறது. இவையெல்லாம் பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தர்காக்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் தொடர்பில் இருப்பவையாகும். இவற்றின் வழியாக வரும் வருமானங்கள் இவை சார்ந்த நலப்பணிகளுக்கு செலவிடப்படுகின்றன. இவற்றை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்பு வாரியங்கள் நிர்வகிக்கின்றன. இவற்றில் படித்த- சமூக ஈடுபாடு கொண்ட பெண்கள் பரவலாக பணியாற்றுகின்றனர்.
இதன் அரசு சார்ந்த நிர்வாக பொறுப்புகளில் பிற சமூகத்தவரும் உள்ளனர். இந்த நிலையில் வெளியாகும் தகவல்கள் இவற்றை சீர்குலைக்கும் உள்நோக்கிலேயே பாஜக அரசின் புதிய அணுகுமுறைகளாக உள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் செய்வது எனில், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்துடன் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவின் ஆலோசனைகளின் படியே எந்த சட்ட முன்வடிவையும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இதை கவனத்தில் கொள்ளாமல் ஒன்றிய அரசு, அதிகார திமிருடன் அத்துமீறுமேயானால் நாடு தழுவிய ஜனநாயக போராட்டங்களை சந்திக்க வேண்டி வரும். எனவே நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஒன்றிய அரசை எச்சரிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.