தமிழ்நாடு

குவார்ட்டர் மதுபாட்டில்களை அதிகமாக விற்கும் டாஸ்மாக் விற்பனையாளர்கள்- மது பிரியர்கள் புகார்

Published On 2024-02-13 07:25 GMT   |   Update On 2024-02-13 07:25 GMT
  • ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.
  • விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் டாஸ்மாக் மது கடைகள் மூலமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 5,300 கடைகள் மூலமாக விதவிதமான மது வகைகள் விற்பனை செய்ய 23 ஆயிரம் விற்பனையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

பண்டிகை காலங்கள் விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டு 44 ஆயிரம் கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு அதனை 46 ஆயிரம் கோடியாக ஆக உயர்த்துவதற்கு திட்டமிட்டு மது விற்பனை சுறு சுறுப்பாக நடைபெற்று வருகிறது.

10 ரூபாயில் இருந்து 80 ரூபாய் வரை அளவுக்கு ஏற்ப மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் 10 ரூபாய் வரையில் கூடுதலாக விற்பனையாளர்கள் வசூல் செய்வதும் தொடர்கிறது.

இதனை தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மதுக்கடைகள் முன்பு விலை பட்டியல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் பெரும்பாலான கடைகளில் அதனை அமல்படுத்தாமல் உள்ளனர். விற்பனையாளர்கள் வழக்கம் போல 10 ரூபாயை கூடுதலாக ஒவ்வொரு பாட்டிலுக்கும் வசூலித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே அதிக அளவில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரைபாட்டில் மதுபானத்தை கேட்டால் அதற்கு பதிலாக இரண்டு குவார்ட்டர் பாட்டி லை தருவதாக அவர்கள் கூறியுள்ளனர். 2 குவார்ட்டர் மது பாட்டிலை கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு பத்து வீதம் 20 ரூபாய் வசூலிக்கலாம். ஆனால் அரை பாட்டில் மதுபானத்தை கொடுத்தால் பாட்டிலுக்கு ரூ.10 மட்டுமே வசூலிக்க முடியும் என்றும் மது பிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாகவே குவார்ட்டர் பாட்டில்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு மறைமுகமாக விற்பனையாளர்கள் வருவாயை ஈட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படி டாஸ்மாக் மதுக் கடைகளில் குவார்ட்டர் மது பாட்டில்கள் 70 சதவீதம் அளவுக்கு விற்பனையாகுவதாகவும் அரை பாட்டில் மதுபானங்கள் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக மது பிரியர்கள் சிலர் கூறும் போது:-

டாஸ்மாக் கடைகளில் பெரும்பாலான நேரங்களில் அரை பாட்டில் மதுபானங்களை விற்பனையாளர்கள் தருவதில்லை. 2 குவார்ட்டர் பாட்டிலை மட்டுமே கொடுத்துவிட்டு ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வீதம் 20 ரூபாய் வசூலித்து விடுகிறார்கள்.

இதன் மூலம் விற்பனையாளர்கள் முதல் அதிகாரிகள் வரை மறைமுகமாக பண வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தனர். இந்த புகார் தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் கேட்ட போது,

"மது பாட்டில்களை கூடு தல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவே கடைகளின் முன்பு விலை பட்டியலை வைப்பதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கூடுதலாக விற்பனை செய்யும் விற்பனை யாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

எனவே மது வாங்கும் குடிமகன்கள் விலை பட்டியலை பார்த்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள பணத்தை மட்டுமே கொடுத்தால் போதும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் இது போன்ற உத்தரவுகள் டாஸ்மாக் கடைகளில் எப்போதுமே காற்றில் பறப்பதாகவே இருந்து வருகிறது.

கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதை தடுக்கவும் அதிக அளவில் சப்ளை செய்யவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மது பிரியர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News