டாஸ்மாக் மதுக்கடைகளில் தட்டுப்பாடின்றி பீர் விற்பனை
- தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர்.
- தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:
டாஸ்மாக் மதுக்கடைகளில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மதுபான ஆலைகளில் இருந்து பீர் வகைகள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு பிரீமியம், லேகர் பீர், கிங்பிஷர் ஸ்ட்ராங் பீர், பிரீமியம் பீர், கிளாசிக் பீர், மேக்மை ஸ்ட்ராங் பீர், எஸ்.என்.ஜே. 10 ஆயிரம் டீலர்ஸ் சூப்பர் ஸ்ட்ராங் பீர், கோல்டு கெஸ்ட்ரா, ஸ்ட்ராங் பீர், ஹண்டர் வூட்பெக்கர், பவர் கூல் உள்பட 35 வகையான பீர் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு தமிழ்நாடு முழுவதும் தினமும் 50 லட்சம் பெட்டிகளுக்கு மேல் பீர் விற்பனையாகிறது. கோடை காலம் வந்து விட்டதால் பீர் விற்பனை இன்னும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் 65 லட்சம் பெட்டி அளவுக்கு பீர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுவும் கூலிங் பீர் வேண்டும் என்று வாடிக்கையாளர்கள் கேட்டு வாங்குகிறார்கள். அதற்கேற்ப டாஸ்மாக் கடைகளில் கூலிங் பீர் தட்டுப்பாடின்றி வினியோகிக்கிறார்கள்.
தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மற்றும் முக்கிய நகரங்களில் வெப்ப நிலை உயர்ந்து வருவதால் மது பிரியர்கள் அதிக அளவில் பீர் குடிக்க தொடங்கி விட்டனர். இதனால் தெலுங்கானா மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளில் பீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கிராம பகுதிகளில் உள்ள மதுக்கடைகளில் பீர் முழுமையான அளவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிமகன்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுபோன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மது ஆலைகளில் இருந்து அதிகளவு பீர் கொள்முதல் செய்யப்பட்டு டாஸ்மாக் கடைகளுக்கு பீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் ஒரு வாரத்துக்கு தேவையான பீர் இருப்பு வைக்கப்பட்டு, தட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் விற்பனையாளர்கள் கூறுகையில், இதற்கு முன்பு மது குடிப்பவர்கள் குறிப்பிட்ட ரக மதுபானங்களை வாங்கி குடிப்பது வழக்கம். மற்ற ரக பீர்களை குடித்தால் தலை வலிக்கும் என்று வாங்க மாட்டார்கள்.
ஆனால் இப்போது அப்படி அல்ல. எந்த ரகமாக இருந்தாலும் வாங்கி குடிக்கிறார்கள். அவர்களுக்கு போதை ஏற வேண்டும். அதுதான் நோக்கம். இதனால் ஒரு பிராண்ட் இல்லாவிட்டால் வேறொரு பிராண்டை வாங்கிச் சென்று குடிக்கிறார்கள். குடிகாரர்களின் மனநிலை மாறிவிட்டது. 5 வருடத்துக்கு முன்பு குடித்தவர்கள் மனநிலை வேறு விதமாக இருந்தது. இப்போது மனநிலை வேறு விதமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் போதைக்கு அடிமையாகி கிடைத்த சரக்கை வாங்கி குடிக்கிறார்கள்.
இதனால் மது தட்டுப்பாடு என்ற நிலை வரவில்லை. டாஸ்மாக் நிர்வாகமும் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்து ஒரு வாரம் இருப்பு வைக்கும் அளவுக்கு சரக்கை அனுப்புகிறார்கள். இதனால் பீர் தட்டுப்பாடு தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.