தமிழ்நாடு

பா.ஜ.க. பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்

Published On 2024-03-30 08:27 GMT   |   Update On 2024-03-30 08:27 GMT
  • சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர்.
  • மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. பட்டியல் அணி மாநில தலைவராக பதவி வகித்து வந்தவர் தடா பெரியசாமி. இவர் திடீரென்று பா.ஜ.க.வில் இருந்து விலகினார். இந்த நிலையில் அவர் இன்று காலை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு சென்றார். அங்கு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், தடா பெரியசாமி அ.தி.மு.க.வில் இணைந்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் பா.ஜ.க.வில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளேன். நான் தமிழக பா.ஜ.க.வில் மாநில பட்டியல் அணி தலைவராக பதவி வகித்தேன். நான் சிதம்பரம் தனி தொகுதியை சேர்ந்தவர். எனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் வேலூரை சேர்ந்த பெண் ஒருவரை பா.ஜ.க. வேட்பாளராக நிற்க வைத்து உள்ளனர். நான் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்தும், அது எனது சொந்த தொகுதியாக இருந்தும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை, பட்டியல் அணி தலைவருக்கே கட்சியில் மரியாதை இல்லை என்றால், இந்த சமுதாய மக்களுக்கு எப்படி மரியாதை இருக்கும். தமிழக பா.ஜ.க.வில் அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகிய 3 பேர் தான் முடிவு எடுக்கிறார்கள். கட்சியில் அவர்கள் 3 பேர் தான் இருக்கிறார்களா? வேறு யாரும் இல்லையா?

எனவே எனக்கு மரியாதை இல்லாததால் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன். இனி அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவேன். இந்த தேர்தலில் மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடா பெரியசாமி கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தற்போது அவர் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட சீட் கேட்டிருந்தார். ஆனால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் அவர் பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News