மாநகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் மறியல்- ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
- காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் 400-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ஊதியமாக ரூ.9300 வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மாநகராட்சி பகுதியில் தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து உள்ளது. இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு இன்று காலை பணியை புறக்கணித்து மாநகராட்சி அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள முக்கிய சாலையான இந்திரா காந்தி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் மாநகராட்சி ஆணையர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது.