தமிழ்நாடு

சாமியாரின் உருவப்பொம்மை பாலத்தில் தொங்கவிடப்பட்டு இருந்த காட்சி.

சாமியாரின் உருவப்பொம்மையை தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்கள்: போலீசார் கடும் எச்சரிக்கை

Published On 2023-09-08 04:17 GMT   |   Update On 2023-09-08 04:18 GMT
  • உதயநிதியின் தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.
  • மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவை:

சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவரது தலைக்கு ரூ.10 கோடி தருவதாக அயோத்தியைச் சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா என்ற சாமியார் அறிவிப்பு வெளியிட்டார்.

சாமியாரின் இந்த மிரட்டலுக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். சாமியாரின் உருவப்படங்களை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாமியார் மீது போலீஸ்நிலையங்களில் புகாரும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பொள்ளாச்சியில் சாமியாரின் உருவப்பொம்மையை நள்ளிரவில் யாரோ தூக்கில் தொங்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் ரோட்டில் மேம்பாலம் உள்ளது.

இந்த மேம்பாலத்தில் இரவு 9.30 மணி அளவில் சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் உருவ பொம்மையை சிலர் தூக்கில் தொங்க விட்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் யாரோ ஒருவர் தூக்கில் தொங்குவது போல அந்த பொம்மை காணப்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அங்கு சாமியாரின் படம் ஒட்டப்பட்டு உருவப்பொம்மை தொங்கவிடப்பட்டு இருந்தது. உடனடியாக அந்த உருவப்பொம்மையை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

சனாதனம் பிரச்சினை தொடர்பாக கோவையில் தி.மு.க. மற்றும் பா.ஜ.க .வினர் மாறி, மாறி சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில் மாநகர பகுதியில் சர்ச்சைக்குரிய வாசகத்துடன் சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சுவரொட்டிகளில் அச்சகத்தின் பெயர், உரிமம் எண் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட வேண்டும். அப்படி குறிப்பிடவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

Similar News