மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி
- திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் பென்னி (வயது 67), ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார்.
திருப்பூரில் இருந்து தினந்தோறும் ரெயில் மூலமாக கோவையில் உள்ள கல்லூரிக்கு பணிக்கு சென்று வந்துள்ளார் .
கடந்த 1-ந்தேதி பணிக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் ராஜன் பென்னியை காணவில்லை என திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
தொடர்ந்து திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் நிலையத்திலிருந்து அவர் வழக்கமாக செல்லும் பாதைகளில் உள்ள சிசிடிவி., கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலை, அய்யப்பன் கோவில் அடுத்த சூசையாபுரம் செல்லும் ரெயில்வே சுரங்க பாலம் வழியே கடந்த 1-ந் தேதி இரவு திரும்பியுள்ளார். அதன் பிறகு கண்காணிப்பு கேமராக்களில் அவர் சென்றது பதிவாகவில்லை.
எனவே அப்பகுதியில் உள்ள அகன்ற சாக்கடை கால்வாயில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு முதல் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சூசையாபுரத்தில் இருந்து ராயபுரம் செல்லும் வழியில் உள்ள சாக்கடை கால்வாயில் அவரது இருசக்கர வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் வேறு பகுதிக்கு அடித்துச்சென்று இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1-ந்தேதி இரவு திருப்பூரில் கனமழை பெய்தது. அப்போது ராஜன் பென்னி ரெயில் நிலையத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வழக்கமான பாதையில் திரும்பியுள்ளார். சூசையாபுரம் சுரங்கப்பாலத்தில் தேங்கியிருந்த மழைநீரை கடந்து செல்ல முயன்ற போது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.