மீன் விற்பனை செய்ய தாய்-தந்தைக்கு ரூ.25 லட்சம் கார் வாங்கி கொடுத்த மகன்
- நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.
- வேலை பார்ப்பதற்காக மகன் கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள அச்சுந்தன்வயல் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம்(வயது60). இவரது மனைவி காளியம்மாள்(55). இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.
சிவானந்தமும், அவரது மனைவியும் ஊரணி மற்றும் கண்மாயில் மீன் பிடித்து விற்பனை செய்து தங்களது பிள்ளைகளை படிக்க வைத்தனர். வறுமை காரணமாக தங்குவதற்கு கூட இடமில்லாமல் தவித்த சிவானந்தம், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கீழக்கரையில் ஒருவரது விவசாய நிலத்தில் தங்கியிருந்தார்.
தங்களது கஷ்டத்தை பற்றி கவலைப்படாமல் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தனர். இதனால் சிவானந்தத்தின் மகன் சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினீயரிங் படித்து முடித்தார். அவர் தற்போது வளைகுடா பகுதியில் உள்ள கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ.2 லட்சம் ஊதியத்தில் என்ஜினீயராக பணி புரிந்து வருகிறார்.
அதன்மூலம் தனது சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த சுரேஷ் கண்ணன், வீடு இல்லாமல் தவித்த பெற்றோருக்கு புதிதாக வீடும் கட்டி கொடுத்துள்ளார். மேலும் தனது தாய்-தந்தையை வேலைக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார். ஆனால் உழைத்து சாப்பிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சிவானந்தம் மற்றும் அவரது மனைவி தொடர்ந்து மீன் விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
வயதான காலத்திலும் உழைக்கும் தங்களின் தாய்-தந்தையின் கஷ்டத்தை குறைக்கும் வகையிலும், அவர்கள் எளிதாக மீன் விற்பனை செய்வதற்காகவும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள காரை சுரேஷ் கண்ணன் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே தற்போது சிவானந்தம் மீன்களை எடுத்து சென்று வியாபாரம் செய்து வருகிறார்.
மீன் விற்பனை எங்களது குடும்ப தொழில். எனக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் மீன் விற்க செல்லாமல், வீட்டிலேயே இருக்குமாறு எனது மகன் கூறினார். ஆனால் கடைசி வரை தொழிலை விடாமல் உழைக்க வேண்டும் என்பதே எனது எண்ணமாகும்.
நான் வெயிலில் சென்று மீன் விற்க வேண்டாம் என்று கருதி எனது மகன் எனக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரிலேயே மீன்களை ஏற்றி கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வறுமை நிலையிலும் கடினமாக உழைத்து படிக்க வைத்து ஆளாக்கிய தாய்-தந்தையின் வலியை உணர்ந்து, அவர்கள் எளிதாக சென்று வேலை பார்ப்பதற்காக மகன் சொகுசு கார் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.