தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊருக்கு வந்த தேனி வாலிபர்
- பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும்.
- தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் தேரடி தெருவை சேர்ந்த பால சுப்பிரமணி மற்றும் சுமதி தம்பதியின் மகன் நாக அர்ஜூன் (வயது 23). இவர் அமெரிக்காவில் மெக்சிகோ பகுதியில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தற்போது 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தனது வாக்குரிமையை செலுத்த வேண்டும் என்பதற்காக தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் தங்களது வாக்குகளை வீணடிக்காமல் என்னை போல் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் எனவும், தற்போது தமிழக அரசு அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் வாக்களிப்பது அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது எனவும் கூறினார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து வந்துள்ளேன். என்னுடன் இந்தியாவை சேர்ந்த பலரும் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சிலர் என்னுடன் வந்தனர். மேலும் பலர் அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு நாளில் வருகை தர உள்ளனர்.
உள்ளூரில் இருந்தால்கூட நாம் வாக்களித்து என்ன மாற்றம் வந்துவிட போகிறது என்று சிலர் நினைத்து வீட்டிலேயே இருந்து விடுகின்றனர். இது தவறான செயலாகும். என்னைப்போல வேலை நிமித்தமாக வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும் சொந்த நாட்டிற்கு வந்து தங்கள் வாக்குரிமையை செலுத்த நான் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன் என்றார்.
வாக்குப்பதிவிற்காக அமெரிக்காவில் இருந்து வந்த நாக அர்ஜூனனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.