தமிழ்நாடு

நாட்டுக்கு சிறந்த பிரதமர் தேவை என்பதால் பாரதிய ஜனதாவை ஆதரிக்கிறோம்- தினகரன்

Published On 2024-04-14 09:15 GMT   |   Update On 2024-04-14 09:15 GMT
  • சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
  • தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

சென்னை:

பா.ஜனதா ஆதரவுடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பா.ஜனதாவை ஆதரிப்பதற்கான காரணம் பற்றி விளக்கினார்.

கேள்வி:-1999-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்து மக்களை சந்திக்கிறீர்கள். மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?

பதில்:-1999-2004 கால கட்டத்தில் நான் பெரிய குளம் தொகுதி எம்.பி.யாக இருந்து நிறைய பணிகள் செய்து இருக்கிறேன். அரசியல் சூழ்நிலையால் அதன் பிறகு வெற்றி வாய்ப்பை இழந்தேன். நான் 21,155 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன். இது மற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும் போது நன்றாகவே இருந்தது. அதனால் என்னை அம்மா ஜெயலலிதா மேல்சபை எம்.பி. ஆக்கினார். தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

ஆண்டிப்பட்டி மற்றும் சேடப்பட்டியில் என்னால் உருவான அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ஆகியவற்றால் 14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த எனக்கு மக்கள் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

கேள்வி:- உங்களை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் (தி.மு.க.), நாராயணசாமி (அ.தி.மு.க.) ஆகியோர் உங்களோடு அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான். இதனால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறதா?

பதில்:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரிஜினல் அ.தி.மு.க. என்பது இல்லை. இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சி. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் போய் விடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார். தி.மு.க. மக்கள் விரோத கட்சியாக உள்ளது. எனவே அவர்கள் கனவு நிறைவேறப் போவதில்லை.


கேள்வி:-தங்க தமிழ்செல்வனும், நீங்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் போது சமூக ரீதியான வாக்குகள் அதிக அளவில் யாருக்கு கிடைக்கும்?

பதில்:-தேனி ஒரு காஸ்மோபாலிடன் தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் முஸ்லீம்கள் உள்பட அனைத்து சமூகங்களின் வேட்பாளர்களும் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் பா.ஜனதா கூட்டணியால் வாக்குகளை அதிக அளவு பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

பதில்:-நான் அ.ம.மு.க.வை தொடங்கிய போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமரின் ஒத்துழைப்போடு பல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றுவேன்.

கேள்வி:-உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

பதில்:-அந்த நேரத்தில் என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்தார். நானும் கைது செய்யப்பட்டிருந்தேன். ஒரு காவலாளி மட்டும்தான் இருந்தார். பங்களாவுக்குள் நுழைந்தவர்கள் அம்மாவின் பாதுகாப்பில் ஊழல் அமைச்சர்கள் பற்றிய பதிவுகள் இருப்பதாக நம்பினார்கள்.

எனவே இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

கேள்வி:-ஜெயலலிதாவின் கொள்கைகளை பின் பற்றுவதாக கூறுகிறீர்கள். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு எதிரானவர். நீங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

பதில்:-அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவரது நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி இருப்போம். தற்போது தேசத்துக்கு தேவை சிறந்த பிரதமர். மோடிக்கு நிகரானவர்கள் இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் பாராட்டப்படும் மோடிக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

கேள்வி:-எடப்பாடி பழனிசாமிக்கான வாய்ப்புகள் மற்றும் உங்களைப் பற்றிய அவரது விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்:-எடப்பாடி பழனிசாமி யாரால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்த போது அவரை கட்சியை விட்டு நீக்கினார். எனவே மற்றவர்களை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து பாடம் புகட்டுவார்கள்.

கேள்வி:-உங்களால்தான் அ.தி.மு.க. பிளவு பட்டதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறாரே?

பதில்:-அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் 2½ ஆண்டுகள் என்னுடன் இருந்தார். ஏன் அப்படி செய்தார் என்பது என் கேள்வி.

இவ்வாறு அவர் கூறி னார்.

Tags:    

Similar News