குடியிருப்பு பகுதியில் புகுந்து 4 ஆடுகளை அடித்துக்கொன்ற புலி: பழங்குடியின மக்கள் பீதி
- கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர்.
- பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே சிற்றார் சிலோன் காலனி பகுதியில் குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புலி கடித்து கொன்றது.
இதனால் பழங்குடி மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் அடுத்தடுத்து அந்த பகுதிகளில் ஆடு, மாடுகளை புலி கடித்து குதறியது. வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.
சிற்றார் சிலோன் காலனி உட்பட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணித்து வந்தனர். சிலோன் காலனி குடியிருப்பு பகுதியில் புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்பட்டு இருந்தது. எலைட் படையினரும் மருத்துவ குழுவினரும் அங்கேயே முகாமிட்டு தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.
கடந்த இரண்டு வாரங்களாக புலி நடமாட்டம் குறித்து எந்த தகவலும் கிடைக்காததையடுத்து எலைட் படையினரும் டாக்டர் குழுவினரும் தேடுதல் பணியை கைவிட்டனர். இருப்பினும் குமரி மாவட்ட வனத்துறையினர் சிலோன் காலனி பகுதியில் கண்காணித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு ஆறுகாணி அருகே ஒரு நூறாம் வயல் கீழ்மலை பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்து கொன்றது பழங்குடி மக்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளை புலி கடித்துக் கொன்றது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இரண்டு குடியிருப்புகளில் கட்டப்பட்டிருந்த நான்கு ஆடுகளை புலி கடித்துக் கொன்றிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.
ஏற்கனவே சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டை யின் காரணமாக புலி ஒரு நூறான் வயல் கீழ் மழை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று தெரிகிறது. பழங்குடியினர் வசித்துவரும் பகுதியில் புலிஅட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
புலி நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம். கடந்த சில நாட்களாக புலி தென்படவில்லை. ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணிக்கப்பட்டது. புலி நடமாட்டம் தென்படாததால் தேடுதல் பணியில் ஈடுபட்ட படையினர் திரும்பி சென்றனர். தற்போது ஒரு நூறான் வயல் கீழ்மலை பகுதியில் குடியிருப்பில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்துள்ளது.
அந்த பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதுடன் கூண்டு அமைத்து புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். பொதுமக்கள் வீடுகளில் ஆடுகளை கட்டும்போது அந்த பகுதியில் தீ வைத்திருந்தால் புலி அந்த பகுதிக்கு வராமல் தடுக்க முடியும். புலியை பிடிக்க பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.