திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நிறைவு: மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது
- கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
- ஆரூத்ரா தரிசன நாளில் மகாதீப மை வினியோகம் செய்யப்பட உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்றது. கடந்த 26-ந் தேதி கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் மலை உச்சியில் தொடர்ந்து 11 நாட்கள் காட்சியளித்தது.
அதன்படி தினமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. 11-ம் நாளான நேற்று மாலை 6 மணியளவில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இந்த ஆண்டிற்கான மகா தீபம் ஏற்றப்படும் நிறைவு நாளையொட்டி மகா தீபத்தை தரிசனம் செய்ய நேற்று மாலை கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து தரிசனம் செய்தனர்.
மகாதீபம் மலை உச்சியில் ஏற்றப்பட்டதும் கோவிலில் இருந்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்று பக்தி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து இன்று அதிகாலை மகா தீபம் ஏற்றப்பட்ட தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.
கோவிலில் தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.
ஆரூத்ரா தரிசன நாளில் மகாதீப மை வினியோகம் செய்யப்பட உள்ளது.