தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு: 2½ லட்சம் விவசாயிகளுக்கு ரூ.208 கோடி நிவாரணம் அறிவிப்பு
- கரும்புப் பயிரில் உயர் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
- நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அப்போது அவர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். வேளாண் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் 7,705 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு, இதுவரை, 23,237 ஏக்கர் பரப்பளவில் வேளாண் பயிர்களும், 3,587 ஏக்கர் பரப்பளவில் பழ மரக்கன்றுகள், மரங்கள் முதலியவையும் நடப்பட்டு, தரிசு நிலங்கள் நிரந்தர சாகுபடிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
2020-2021-ம் ஆண்டில் 89 லட்சத்து ஆறாயிரம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்றபயிர் பரப்பு, 2022-2023-ஆம் ஆண்டில் 95 லட்சத்து 39 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
இயற்கை இடர்ப்பாடுகளினால் ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காத்திட, 25 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையாக இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, 4,436 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில் விதைப்பு பொய்த்தல் இனத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட சம்பா நெற்பயிருக்கு 2022-2023, 2023-2024-ம் ஆண்டுகளில் பயிர் இழப்பு ஏற்பட்ட அதே ஆண்டிலேயே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டில், கடந்த 2022-2023-ம் ஆண்டில், தென்மேற்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, மாண்டஸ் புயல், வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெய்த கனமழை, பருவம் தவறிப் பெய்த மழை, வறட்சி, கடந்த மார்ச் 2023-ல் பெய்த ஆலங்கட்டி மழை ஆகிய இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர்ச் சேதத்திற்கு, 380 கோடியே 40 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
குறுவைப் (காரீப்) பருவத்தில் ஏற்பட்ட மகசூல் இழப்பு, மிச்சாங் புயல், மக்காச்சோளப்பயிரில் ஏற்பட்ட மகசூல் இழப்பு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 85 ஆயிரம் விவசாயிகளுக்கு 118 கோடியே 77 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. மேலும், கோடை மழை, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு 208 கோடியே 20 லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை, 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
2022-2023-ம் ஆண்டு 35 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கராக இருபோகச் சாகுபடிப் பரப்பு உயர்ந்துள்ளது. கரும்புப் பயிரில் உயர் தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து எக்டருக்கு 111 மெட்ரிக் டன் உற்பத்தித்திறனுடன் தமிழ் நாடு, தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.
நடப்பாண்டில் ஏற்பட்ட பல்வேறு இயற்கை இடர்ப்பாடுகளுக்கிடையிலும், 114 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023- 2024-ம் ஆண்டில் 127 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியினை எட்டுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.