தமிழ்நாடு

இணையவழி கட்டிட அனுமதி பெற எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்- தமிழக அரசு அறிவிப்பு

Published On 2024-07-24 02:14 GMT   |   Update On 2024-07-24 02:14 GMT
  • சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

சென்னை:

தமிழகத்தில் 2500 சதுர அடி வரையிலான மனையில், 3,500 சதுர அடி வரையில் தரைத்தளம் அல்லது தரைத்தளத்துடன் கூடிய முதல் தளம் என கட்டப்படும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுயசான்று அடிப்படையில் இணைய வழி கட்டிட அனுமதி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சதுர அடிக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.15 முதல் ரூ.100 வரையில் உள்ளாட்சி அமைப்புகளின் தரநிலைக்கு ஏற்ப இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வளர்ச்சி கட்டணம், கட்டிட லைசென்சு கட்டணம், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல நிதி, சாலை சேதம் சீரமைப்பு கட்டணம் என அனைத்து அடங்கிவிடும்.

சென்னை மாநகராட்சியில் ஒரு சதுர அடிக்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். சிறப்பு நிலை ஏ மாநகராட்சிகளான மதுரை, கோவை, திருப்பூரில் சதுர அடிக்கு ரூ.88 ம், சிறப்பு நிலை பி மாநகராட்சிகளான தாம்பரம், சேலம், திருச்சியில் சதுர அடிக்கு ரூ.84-ம், தேர்வு நிலை மாநகராட்சிகளான ஆவடி, நெல்லை, வேலூர், தூத்துக்குடி, ஈரோட்டில் சதுர அடிக்கு ரூ.79ம், தஞ்சை, நாகர்கோவில், ஓசூர், கடலூர், கரூர், கும்பகோணம், திண்டுக்கல், சிவகாசி, காஞ்சிபுரத்திற்கு சதுர அடிக்கு ரூ.74-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

நகராட்சிகளை பொறுத்தவரை, 45 சிறப்பு நிலை மற்றும் தேர்வு நிலை நகராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.74 ம், நிலை-1, நிலை-2 என 93 நகராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.70-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். பேரூராட்சிகளை பொறுத்தவரை 62 சிறப்பு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.70-ம், 179 தேர்வு நிலை பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.65-ம், 190 நிலை -1 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.55-ம், நிலை-2 பேரூராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.45-ம் கட்டணமாக செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளை பொறுத்தவரை, சி.எம்.டி.ஏ. எல்லைக்குள் உள்ள நகர் கிராம ஊராட்சிகளில் ஒரு சதுர அடிக்கு ரூ.27-ம், இதர பகுதிகளில் நகர் கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.25-ம், சி.எம்.டி.ஏ எல்லைக்குள் உள்ள இதர ஊராட்சிகளுக்கு சதுர அடிக்கு ரூ.22-ம், இதர 11 ஆயிரத்து 791 கிராம ஊராட்சிகளில் சதுர அடிக்கு ரூ.15-ம் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் அனைத்தும் சுய சான்று மூலம் கட்டப்படும் கட்டிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

Tags:    

Similar News