முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள்- தமிழக அரசு பெருமிதம்
- 75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்” என்ற அறிவிப்பு.
- திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நடந்து முடிந்த இந்தப் சட்டபேரவை தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கும் தமிழ்மக்களுக்கும் பெரும் பயன்கள் தந்திடும் சில முக்கிய அறிவிப்புகளைச் சட்டப்பேரவை விதி 110 மூலம் வெளியிட்டு வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
அதில் வருகிற இரண்டு ஆண்டுகளில் "முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்" மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரகச் சாலைகள் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்"-என்றும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு கிராமங்களின் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசின் அக்கறையை வெளிப்படுத்தினார்.
75,000-க்கும் மேற்பட்ட அரசுப் பணியிடங்கள் வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நிரப்பப்படும்" என்ற அறிவிப்பு, ஓசூரில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில், ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய வகையில், ஒரு பன்னாட்டு விமான நிலையம் அறிவிப்பு, திருச்சி மாநகரில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக சேதாரம் அடைந்துள்ள 6746 அடுக்குமாடி குடியிருப்புகளை 1149 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளுக்கும் வழிவகை செய்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110 அறிவிப்புகளை வெளியிட்டதன் மூலம் என்றும், எப்பொழுதும் தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என்பதைச் சொல்லிலும் செயலிலும் நிலை நாட்டியுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.