குரூப் 4 தேர்வு: பணியிடங்களை அதிகரிக்க டி.என்.பி.எஸ்சி திட்டம்
- தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. சார்பில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
இந்த அறிவிப்பின் மூலம் 6 ஆயிரத்து 244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இத்தேர்வை சுமார் 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இத்தேர்வுக்கான முடிவு அக்டோபர் மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்களை அதிகரிப்பதற்கான கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், அக்டோபர் மாதத்தின் முதல் அல்லது 2வது வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
காலிப் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரி வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் பேர் எழுதியுள்ள இத்தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் தற்போது 6,724ஆக உள்ளது. முன்னதாக, இத்தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.