ஆட்டம்-பாட்டத்துடன் புத்தாண்டை கொண்டாடிய சுற்றுலாபயணிகள்
- தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது.
- சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.
ஊட்டி:
மலைகளின் ராணி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுற்றுலாபயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கிறார்கள்.
2024 புத்தாண்டு நள்ளிரவில் பிறந்தது. புத்தாண்டை கொண்டாடுவதற்காக நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், ரிசார்ட்டுகள், லாட்ஜ்களில் விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதேபோல் தனியார் அமைப்பினரும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகம் இருந்தது. ஓட்டல்கள், லாட்ஜ்கள் சுற்றுலாபயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாதலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. சுற்றுலாதலங்களை சுற்றி பார்த்து விட்டு இரவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களில் சுற்றுலாபயணிகள் பங்கேற்றனர்.
இன்னிசை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், அறுசுவை உணவு என புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. நள்ளிரவு 12 மணிக்கு சுற்றுலாபயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர். அதிகாலை 3 மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி இருந்தது.
இன்று காலையும் ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டிக்கு வருகை தந்தனர். ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலாபயணிகள் கம்பளி ஆடை மற்றும் குல்லா அணிந்து புத்தாண்டு கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.
சுற்றுலாபயணிகள் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.