குற்றாலம் மெயின் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
- மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரதான சுற்றுலா தளமானது குற்றாலம்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
மார்கழி மாதம் ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதால் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் சபரிமலையில் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்கள் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது.
தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
தொடர் விடுமுறையை கழிக்க வெளியூர் மட்டும் தென்காசி சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் வரத்தொடங்கியுள்ளனர்.
மெயின் அருவியில் நீர் வரத்து சீராக இருப்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் தற்போது மெயின் அருவியில் குவிந்துள்ளனர்.
தற்போது குற்றால அருவிகளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வேன், கார், பஸ், மோட்டார் சைக்கிள் என பல்வேறு வாகனங்களில் குடும்பமாக வந்து உற்சாக குவிந்து வருகின்றனர். மேலும் குற்றாலம் பேரூராட்சி பூங்கா, குண்டார் அணை, அடவி நயினார் அணை பகுதி, பண்பொழி குமாரசாமி கோவில், தோரணமலை முருகன் கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.