தி.மு.க. என்ற இமயமலை வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது - டி.ஆர். பாலு
- தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
- அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விட போகிறார்.
இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்த வகையில், நெல்லையில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஆளும் தி.மு.க. கட்சி மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தி.மு.க. விரைவில் காணாமல் போகும் என்றும் அக்கட்சியின் வேஷம் விரைவில் கலையும் என்று பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு திட்டங்களுக்கு மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. சார்பில் எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்தார். இது குறித்து பேசிய அவர், தி.மு.க. காணாமல் போகும் என்று கூறிய பலர் காணாமல் போயுள்ளனர் என்று தெரிவித்தார். இவரை தொடர்ந்து மோடியின் குற்றச்சாட்டுக்கு தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு பதிலடி கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜெயலிலதாவை வைத்து தமிழ்நாட்டில் ஓட்டு வாங்க பிரதமர் மோடி நினைக்கிறார். தி.மு.க.-வை இல்லாமல் ஆக்கிடுவோம் என்று கூறியவர்கள் எல்லாம் வரலாற்றில் காணாமல் போய்விட்டார்கள். அந்த வரிசையில் பிரதமரும் விரைவில் இணைந்து விட போகிறார்."
"தி.மு.க. உருவான 1949-ம் ஆண்டில் இருந்து 74 ஆண்டு காலமாக பலர் இவ்வாறு பேசிக் கடந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க. என்ற இமயமலை இன்றும் வரலாற்றில் நிமிர்ந்து நின்று கொண்டுதான் இருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.